செய்திகள்
மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி

விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்கள் பணி சிக்கலாகி இருக்கும்- மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி

Published On 2020-08-08 05:00 GMT   |   Update On 2020-08-08 05:00 GMT
விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும் என மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுபற்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி மற்றும் மும்பையில் இருந்து மொத்தம் இரு சிறப்பு நிவாரண விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பயணிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்குவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள விமான விபத்து புலனாய்வு துறை, மத்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் மற்றும் விமான பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் செல்கின்றனர் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் விமான விபத்து நடந்த கரிப்பூருக்கு இன்று செல்கின்றனர்.

இந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இரு விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது. 127 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து சென்று விட்டனர் என தெரிவித்து உள்ளார்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு 190 பயணிகளுடன் வந்த இந்த விமானத்தின் விமானி, ஓடுதள பாதையின் முடிவு பகுதி வரை ஓட்டி செல்ல முயற்சித்து இருக்க வேண்டும். பருவமழை பொழிவால் ஏற்பட்ட சறுக்கலான நிலையால், விமானம் ஓடுதள பாதையில் இருந்து விலகி சென்றுள்ளது என தெரிவித்து உள்ளார்.

ஒருவேளை விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும். நான் விமான நிலையத்திற்கு செல்ல இருக்கிறேன் (கரிப்பூரில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம்) என சிங் கூறியுள்ளார்.

Tags:    

Similar News