செய்திகள்
தற்கொலை

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-08-07 13:16 GMT   |   Update On 2020-08-07 13:16 GMT
பெங்களூருவில் கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க கூறியதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பெங்களூரு:

பெங்களூரு மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 44 வயது நபர் வசித்து வந்தார். இவர், மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின்பு தொழிலாளி குணமடைந்தார். அதைத்தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் இருந்து துப்புரவு தொழிலாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட துப்புரவு தொழிலாளியை வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த அவர் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசியுள்ளார். பின்னர் நண்பரை பார்த்து வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே புறப்பட்டு சென்றுள்ளார்.

பின்னர் மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு துப்புரவு தொழிலாளி சென்றுள்ளார். அப்போது அவரது நண்பர் வெளியே சென்றுவிட்டு வருவதாக சொல்லி சென்றுள்ளார். இந்த நிலையில், நண்பர் வீட்டில் தனியாக இருந்த துப்புரவு தொழிலாளி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த நண்பர் வீட்டுக்கு திரும்பி வந்த போது தொழிலாளி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் மாகடி ரோடு போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

அப்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளான தொழிலாளி, குடும்பத்தினரிடம் தான் வயிற்று வலி காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறியுள்ளார். ஆனால் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதால், மனம் உடைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News