செய்திகள்
மைசூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டுக்கு ‘சீல்’

மைசூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டுக்கு ‘சீல்’

Published On 2020-08-05 03:09 GMT   |   Update On 2020-08-05 03:09 GMT
சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, ராமகிருஷ்ணா நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. மேலும் அவருடைய வீடு முழுவதும் கிருமி நாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நாளுக்கு நாள் பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாரபட்சமின்றி அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பாவும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சித்தராமையா கடந்த வாரம் மைசூரு வந்து ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தார். அவர் மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும் செய்தியாளர்களை சந்தித்தும் பேட்டி அளித்து வந்தார். தனது வீட்டில் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தி இருந்தார்.

இந்த நிலையில் சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, ராமகிருஷ்ணா நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. மேலும் அவருடைய வீடு முழுவதும் கிருமி நாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. சித்தராமையாவின் வீடு இருக்கும் தெருவும் சீல் வைக்கப்பட்டது. மேலும் சித்தராமையாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags:    

Similar News