செய்திகள்
அயோத்தி ராமர் கோவில்

ராமர் கோவிலுக்கு புனே பல்கலைக்கழகம் ரூ.21 கோடி நன்கொடை

Published On 2020-08-05 00:33 GMT   |   Update On 2020-08-05 00:33 GMT
புனே மாயீர்ஸ் எம்.ஐ.டி. உலக அமைதி பல்கலைக்கழகம் ராமர் கோவிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்து உள்ளது.
புனே:

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து நன்கொடைகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் மராட்டியத்தின் புனேயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மாயீர்ஸ் எம்.ஐ.டி. உலக அமைதி பல்கலைக்கழகம் ரூ.21 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்து உள்ளது.

இந்த தகவலை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நித்ய கோபால்தாஸ், பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி ஆகியோர் தெரிவித்தனர்.

எம்.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் தலைவரான பேராசிரியர் விஸ்வநாத் டி.கரட், நிர்வாக தலைவர் ராகுல் வி.கரட் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நிதி வழங்கப்படுகிறது. இந்த நன்கொடையில் மேற்படி பல்கலைக்கழக கிளைகளை சேர்ந்த 75 ஆயிரம் மாணவ-மாணவிகள், 5 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பும் அடங்கி உள்ளது.

இந்த பல்கலைக்கழகம் சார்பில் கோவிலில் 30 அடி நீளம், 30 அடி அகலத்தில் வெள்ளை பளிங்கு கற்களால் கருவறை அமைக்கப்படுகிறது. இந்த கருவறையில் ஒற்றை பளிங்கு கல்லில் செதுக்கப்பட்ட 11.5 அடி அழகான ராமபிரான் சிலை, 9.25 அடியில் லட்சுமண் மற்றும் சீதாதேவி ஆகியோருக்கும் சிலை வைக்கப்படுகிறது. அவையும் ஒரே பளிங்கு கல்லில் செதுக்கப்படுகின்றன.

இவை மட்டுமின்றி விஸ்வதர்மி ஸ்ரீராம் பாரதிய சங்குரதி தரிசன நூலகம் உள்ளிட்டவையும் இந்த பல்கலைக்கழகத்தால் அமைக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் ரூ.21 கோடி செலவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News