செய்திகள்
கோப்பு படம்

காஷ்மீர்: ஸ்ரீநகரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கம்

Published On 2020-08-04 20:44 GMT   |   Update On 2020-08-04 20:44 GMT
காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்றும்,இன்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது.
காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், அப்பகுதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டது. சமூகவலைதள பக்கங்கள் தடை செய்யப்பட்டன. செல்போன், தொலைபேசி, சேவைகள் நிறுத்தப்பட்டன. இணைய தள சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. 

மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

தற்போது நிலைமை  சீரடைந்ததையடுத்து வீட்டுக்காவலில் இருந்த பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் மெகபூபா முப்தி உள்ளிட்ட சில தலைவர்களுக்கு வீட்டுக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்றுடன் 1 ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி காஷ்மீரில் இன்று கருப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாகவும், பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபடலாம் எனவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுருப்பதாகவும்
பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு நேற்றும் (ஆகஸ்ட் 4) இன்றும் (ஆகஸ்ட் 5) 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் நேற்று ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படுவதாக மாவட்ட மேஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். தடை உத்தரவு நீக்கம் உடனடியாக அமலுக்குவருவதாகவும் தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமலில் உள்ள நடைமுறைகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் எனவும் 144 தடை உத்தரவு மற்றும் அதுசார்ந்த உத்தரவுகள் அனைத்தும் திரும்பப்பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்றுடன் 1 ஆண்டுகள் நிறைவடைவதால் யூனியன்பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News