செய்திகள்
அத்வானி

போராட்டத்தின் அடையாளம் ராமர் கோவில் - அத்வானி அன்று சொன்னது

Published On 2020-08-04 19:58 GMT   |   Update On 2020-08-04 19:58 GMT
உண்மையான மதச்சார்பின்மைக்கும், போலியான மதச்சார்பின்மைக்கும் இடையேயான போராட்டத்தின் அடையாளம்தான் ராமர்கோவில் என்று அத்வானி தனது சுயசரிதையில் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை முன்னிறுத்தி, 1990-ம் ஆண்டு ரத யாத்திரை நடத்தியவர், அன்றைய பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக திகழ்ந்த எல்.கே. அத்வானி.

இந்துத்துவ அரசியலின் முகமாக அந்த ரத யாத்திரை மாறியது.

இந்த யாத்திரை மூலம் அன்றைக்கு நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சிக்கான ஆதரவை பலப்படுத்துவதில் ஒரு மாபெரும் சக்தியாக திகழ்ந்தவர் அத்வானி. அன்றைக்கு அந்த ரத யாத்திரையில் அத்வானியுடன் இருந்தவர், இன்றைய பிரதமர் நரேந்திர மோடி என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

அந்த ரத யாத்திரை அயோத்தியில் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய பீகார் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் உத்தரவின்கீழ் அத்வானி கைது செய்யப்பட்டுவிட்டதால் பாதி வழியில், பீகாரின் சமஸ்திப்பூரில் ரத யாத்திரை முடிவுக்கு வந்தது.

அத்வானி 2008-ம் ஆண்டு ‘எனது தேசம், எனது வாழ்க்கை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார். அப்போது அதில் அவர் ரத யாத்திரை பற்றிய நினைவுகளை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் ராமர் கோவில் பற்றி குறிப்பிடுகையில், “உண்மையான மதச்சார்பின்மைக்கும், போலியான மதச்சார்பின்மைக்கும் இடையேயான போராட்டத்தின் அடையாளம்தான் ராமர்கோவில்” என கூறி உள்ளார்.

அந்த புத்தகத்தில் அயோத்தி அத்தியாயத்தின் முடிவில் அத்வானி, “இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் கூட்டு முயற்சிகள் மூலம் அயோத்தி பணி நிறைவு அடையும். அது பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்வானியின் கனவான ராமர் கோவிலுக்கு இன்று அயோத்தியில் பூமிபூஜை. 95 வயதான அத்வானிக்கு அவரது ரத யாத்திரை நினைவுகள் இன்று நினைவுக்கு வரும். பரஸ்பர நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டில் ஒரு புதிய அத்தியாயமாக ராமர் கோவில் அமையட்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
Tags:    

Similar News