செய்திகள்
எடியூரப்பா

கொரோனாவில் இருந்து குணம் அடைந்து விரைவில் பணிக்கு திரும்புவேன்: வீடியோ வெளியிட்ட எடியூரப்பா

Published On 2020-08-04 02:51 GMT   |   Update On 2020-08-04 02:51 GMT
பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் முதல்-மந்திரி எடியூரப்பா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவில் இருந்து குணமடைந்த விரைவில் பணிக்கு திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

அதுவும் மாநில தலைநகரான பெங்களூருவில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நாள்தோறும் மாநிலம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேரை வைரஸ் தாக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவின் காவேரி இல்லத்தில் பணியாற்றும் சமையல் கலைஞர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 6 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களின் சளி மாதிரியை பரிசோதனைக்கு வழங்கினர். அதில் எடியூரப்பாவுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது.

இதையடுத்து முதல்-மந்திரி எடியூரப்பா எச்.ஏ.எல். விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குழு ஆய்வு நடத்தியது. அவருக்கு நடத்தப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனையில், அவரது உடல்நிலை சகஜ நிலையில் இருப்பது தெரியவந்தது.

கொரோனா அறிகுறி இல்லாத நிலையிலும், முன்எச்சரிக்கையாக தான் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். எடியூரப்பாவுக்கு வைரஸ் தொற்று உறுதியான தகவல் அறிந்த பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா கட்சியினர், எடியூரப்பா விரைவில் குணம் அடைந்து அரசு நிர்வாக பணியில் ஈடுபட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடியூரப்பாவின் மகளும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எடியூரப்பா சிகிச்சை பெறுவதையொட்டி மணிப்பால் மருத்துவமனையை போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

77 வயதான எடியூரப்பா விரைவாக குணம் அடைய வேண்டி அவரது ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜனதாவினர் கோவில்களில் சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டனர். எடியூரப்பா கொரோனா பாதிப்புக்கு ஆளானதை அடுத்து அவரது குடும்பத்தினர் ஆதங்கம் அடைந்து உள்ளனர்.

அவரது மகன் விஜயேந்திரா மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். எடியூரப்பா 4 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும், அதன் பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி ஒரு வீடியோவை பதிவு செய்து எடியூரப்பா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நேற்று (அதாவது நேற்றுமுன்தினம்) இரவு 9 மணிக்கு எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். நீங்கள் விரைவாக குணம் அடைந்து வீட்டுக்கு செல்வீர்கள் என்று தெரிவித்தனர்.

எனக்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி மற்றும் மடாதிபதிகள் நான் குணம் அடைய வேண்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன். அரசு பணிகளுக்கு எந்த குறுக்கீடும் இருக்கக்கூடாது என்றும், அனைத்து பணிகளையும் சரியான முறையில் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளேன். யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. நான் விரைவாக குணம் அடைந்து வந்து, மீண்டும் மக்கள் நல பணிகளில் ஈடுபடுவேன்.

உங்களின் ஆசி மற்றும் ஆதரவு என் மீது எப்போதும் இருக்கட்டும். மக்களின் உடல் ஆரோக்கியம் முக்கியம். அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் தான் இந்த கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.

எடியூரப்பாவுடன் தொடர்பில் இருந்த துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்களாகவே சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

மேலும் எடியூரப்பாவுடன் தொடர்பில் இருந்த அனைவரும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். எடியூரப்பாவுக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் காவேரி இல்லத்தை கிருமிநாசினி தெளித்து, தூய்மைபடுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். வீட்டு வேலையாட்கள் மூலம் அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து எடியூரப்பாவின் இன்னொரு மகள் அருணாதேவி கூறுகையில், “எனது தந்தை மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தார். கைகளுக்கு சானிடைசர் திரவத்தை பயன்படுத்துவதில் கூட அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவார். வீட்டில் எங்களிடம் பேசும்போது கூட முகக்கவசம் அணிந்திருப்பார். ஆயினும் அவருக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். எனது தந்தை மற்றும் சகோதரி, 2 பேரும் விரைவாக குணம் அடைந்து வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இறைவன் அருள் அவருக்கு இருக்கிறது. கடவுள் கைவிட மாட்டார்” என்றார்.
Tags:    

Similar News