செய்திகள்
மோசடி

திருவனந்தபுரம் கலெக்டர் வங்கி கணக்கில் ரூ.2 கோடி மோசடி

Published On 2020-08-03 07:07 GMT   |   Update On 2020-08-03 07:07 GMT
திருவனந்தபுரம் கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 கோடி எடுத்து மோசடி செய்த கருவூல அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டராக நவ்ஜோத் கோசா இருந்து வருகிறார். திருவனந்தபுரம் வஞ்சியூரில் சார் கருவூலம் இயங்கி வருகிறது. இந்த சார் கருவூலத்தில் கலெக்டரின் வங்கி கணக்கு முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இதுபற்றி கருவூல இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சார் கருவூலத்தில் கலெக்டரின் வங்கி கணக்கை அதிகாரிகள் சரி பார்த்தனர். அப்போது ரூ.2 கோடி மாயமானது தெரிய வந்தது. அதுபற்றி விசாரித்த போது, அங்கு பணிபுரிந்து வந்த சீனியர் கணக்காளர் எம்.ஆர்.பிஜூலால் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர், கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற கருவூல ஊழியரிடம் இருந்த கலெக்டர் வங்கி கணக்கின் அடையாள அட்டை மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பயன்படுத்தி ரூ.2 கோடியை எடுத்து தன் வங்கி கணக்கு மற்றும் மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார்.

அதைத்தொடர்ந்து பிஜூலால் தலைமறைவானார். இந்த நிலையில் மாவட்ட கருவூல அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், பிஜூலால் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் மீது நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி வழக்குகளை வஞ்சியூர் போலீசார் பதிவு செய்து உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக பிஜூலால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் பிஜூலால் மற்றும் அவருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. அவர்களது வங்கி கணக்கில் இருந்து ரூ. 61 லட்சத்து 23 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளது. மீதி பணம் வங்கி கணக்கில் அப்படியே உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் நவ் ஜோத் கோசா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘அரசு நிதியினை முறைகேடாக எடுப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நிதித்துறை செயலாளருக்கு நிதி மந்திரி தாமஸ் ஐசக் உத்தரவிட்டு உள்ளார்.
Tags:    

Similar News