செய்திகள்
சித்தராமையா

மக்களின் உயிரை பாதுகாக்காமல் பாஜக அரசு ஊழல் புரியலாமா?: சித்தராமையா கடும் தாக்கு

Published On 2020-08-03 03:21 GMT   |   Update On 2020-08-03 03:21 GMT
கொரோனா நெருக்கடி நேரத்தில் மக்களின் உயிரை பாதுகாக்காமல் பாஜக அரசு ஊழல் புரியலாமா? என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு பிற மாநிலங்களை விட கட்டுக்குள் இருப்பதாக அரசு கூறி வந்தது. இதனால் நாங்களும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தோம். ஆனால் தற்போது கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டை விட அதிகமாக பரவி வருகிறது. இதை பார்த்துக்கொண்டு நாங்கள் இப்போதும் அமைதியாக இருந்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகத்தை போன்றது ஆகாதா?.

நோயாளிகளுக்கு படுக்கை இல்லை, சரியான உணவு கிடைக்கவில்லை, மருந்துகள் இல்லை, ஆம்புலன்ஸ் வாகனங்கள், செயற்கை சுவாச கருவிகள் இல்லை. வீதியில் பிணங்கள் விழுந்தாலும், அதை அடக்கம் செய்ய ஆட்கள் இல்லை என்று ஊடகங்களில் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 29 ஆயிரத்து 287 (நேற்று முன்தினம் நிலவரப்படி) ஆக உள்ளது. 2,420 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதை பார்த்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா?. சிகிச்சை கிடைக்கவில்லை என்று கொரோனா நோயாளிகள் கஷ்டப்படுகிறார்கள்.

இந்த அரசுக்கு மக்களின் கஷ்டம் தெரியவில்லை. மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் பணம் சம்பாதிப்பது மட்டுமே தெரிகிறது. முறைகேடு குறித்து முதல்-மந்திரிக்கு தெரிவித்தால், ஆதாரம் கொடுங்கள் என்று கேட்கிறார். ஆவணங்களை வெளியிட்டால் அது பொய் என்று முதல்-மந்திரி சொல்கிறார்.

விசாரணை நடத்துங்கள் என்று கேட்டால், பொய் புகாருக்கு எதற்கு விசாரணை என்று கேட்கிறார். அதனால் இந்த விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்வதை விட வேறு வழி இல்லை. உபகரணங்கள் கொள்முதல் குறித்த விவரங்களை 24 மணி நேரத்திற்குள் எனது வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக முதல்-மந்திரி சொன்னார். இதை அவர் கூறி 24 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை மாநில அரசு ஒரு தகவலை கூட வழங்கவில்லை.

முறைகேடு குறித்து நாங்கள் பகிரங்கமாக கூறியதால், தற்போது முறைகேடு செய்யும் அளவை சற்று குறைத்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு கொள்முதல் ஆணைகளை அரசு நிறுத்தி வைத்துள்ளது. வயிற்றில் கல் எறிந்துவிட்டேன் என்று அரசு நடத்துகிறவர்கள் என் மீது கோபத்தில் உள்ளனர். அதனால் என்னை தாக்கி பேசுகிறார்கள்.

முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய எங்களுக்கு வக்கீல் மூலம் பா.ஜனதா நோட்டீசு அனுப்பியுள்ளது. இதன் மூலம் எங்களின் பணியை அக்கட்சி சுலபமாக்கிவிட்டது. முறைகேடுகள் குறித்து நாங்களே கோர்ட்டு படிக்கட்டுகளை ஏற வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். எங்களுக்கு வழங்காத ஆவணங்களை கோர்ட்டுக்கு கொடுத்தே தீர வேண்டும் அல்லவா?.

கர்நாடகத்தில் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 80 முதல் 90 பேர் பலியாகி வருகிறார்கள். கொரோனா மரணம் குறைந்து வருவதால், செயற்கை சுவாச கருவிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவதாக மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். இது இதயமற்ற அரசு.

கர்நாடகத்தில் கொரோனா மரணங்கள் அதிகரிப்புக்கு செயற்கை சுவாச கருவிகளின் பற்றாக்குறையும் ஒரு காரணம். பெங்களூருவில் மட்டும் 57 ஆயிரத்து 396 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இங்கு 801 செயற்கை சுவாச கருவிகள் மட்டுமே இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மொத்தத்தில் கர்நாடகம் மிக மோசமான நிலையில் உள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா கட்டுக்குள் வராமல் இருப்பதற்கும், உபகரணங்கள் கொள்முதல் முறைகேடுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. அதனால் இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். கொரோனா நெருக்கடி நேரத்தில் மக்களின் உயிரை காக்க வேண்டிய பா.ஜனதா அரசு, ஊழல் புரியலாமா?. உங்களின் (முதல்-மந்திரி) மனசாட்சியை கேட்டு பாருங்கள்.

எங்களிடம் இருந்து ஒத்துழைப்பு கேட்கும் பா.ஜனதா, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஏன் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வது ஏன்?.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News