செய்திகள்
கைது

கேரளா தங்கம் கடத்தல் விவகாரத்தில் மேலும் 6 பேர் கைது - தேசிய புலனாய்வுத்துறை அதிரடி

Published On 2020-08-03 01:07 GMT   |   Update On 2020-08-03 01:07 GMT
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் விவகாரத்தில் மேலும் 6 பேரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் கைப்பற்றினர். இது தொடர்பாக தூதரக முன்னாள் அதிகாரி சரித் என்பவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய புள்ளிகளுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதில் முன்னாள் தூதரக அதிகாரியும், மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றியவருமான ஸ்வப்னா சுரேஷ் உள்பட மேலும் 3 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும், முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் இந்த கடத்தல் விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த கடத்தல் தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த ஜலால், முகமது அலி இப்ராகிம், முகமது அலி, மலப்புறத்தை சேர்ந்த சைத் அலாவி, முகமது சபி, அப்து ஆகிய 6 பேரை கடந்த 3 நாட்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கம் கடத்தலுக்காக முக்கிய குற்றவாளிகளுக்கு உதவியவர்கள் ஆவர்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 2 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள், டேப்லெட், 8 செல்போன்கள், 6 சிம் கார்டுகள், டிஜிட்டல் வீடியோ பதிவு கருவி, 5 டி.வி.டி.க்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் வங்கி கணக்கு புத்தகங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களும் சிக்கின.

இதன் மூலம் தங்கம் கடத்தல் விவகாரத்தில் விசாரணை வேகமெடுத்து வருகிறது.
Tags:    

Similar News