செய்திகள்
மத்திய உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான்

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் மேலும் 4 மாநிலங்கள்

Published On 2020-08-02 00:57 GMT   |   Update On 2020-08-02 00:57 GMT
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் நாகாலாந்து, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் காஷ்மீர் யூனியன் பிரதேசமும் இணைந்துள்ளன.
புதுடெல்லி:

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் நாகாலாந்து, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் காஷ்மீர் யூனியன் பிரதேசமும் இணைந்துள்ளன. இதன் மூலம் இந்த திட்டத்தில் இணைந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்து உள்ளது.

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் வாங்கி வரும் அனைவரும் நாட்டின் எந்த பகுதியிலும் பொருட்கள் வாங்கிக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றாய் இணைந்து வருகின்றன. அந்தவகையில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தில் இணைந்திருந்தன.

இந்த வரிசையில் மணிப்பூர், உத்தரகாண்ட், நாகாலாந்து ஆகிய மாநிலங்களும், காஷ்மீர் யூனியன் பிரதேசமும் இந்த திட்டத்தில் இணைய தயாராக இருப்பதாக அறிவித்தன. இதைத்தொடர்ந்து அந்த மாநிலங்களும் ஒருங்கிணைந்த ரேஷன் திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இணைந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் 65 கோடி மக்கள் அதாவது 80 சதவீதம் பேர் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.மீதமுள்ள மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களும் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் இணையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை மத்திய உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் ரேஷன் பொருட்கள் வாங்க முடியும் என்பதால், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்த வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மேலும் 4 மாநிலங்கள் இணைந்திருப்பதற்கு பிரதமர் மோடி மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கு பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News