செய்திகள்
தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்பு படம்)

செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நினைக்க வேண்டாம் -மத்திய அரசு

Published On 2020-07-31 09:07 GMT   |   Update On 2020-07-31 09:07 GMT
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்காமல் தேர்வுக்கு தயாராகும்படி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.

இதனை எதிர்த்தும், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கில் யுஜிசி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யம் திட்டம் இல்லை என்றும், அனைத்து பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 2020 இறுதிக்குள் கடைசி செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டு தேர்வை நடத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு யு.ஜி.சி.யை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். 

யுஜிசி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆகஸ்ட் 3ம் தேதி இந்த வழக்கில் யுஜிசி பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். 

மேலும், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்றும், செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் சிக்கிவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார். மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக முடியாது என்ற எண்ணத்தில் யாரும் இருக்கக்கூடாது என்றும் கூறினார். 

இதையடுத்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், மகாராஷ்டிர மாநில பேரிடர் மேலாண்மை குழுவும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News