செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

திப்பு சுல்தான் பற்றிய பாடங்களை நீக்கும் முடிவு நிறுத்திவைப்பு: கர்நாடக அரசு உத்தரவு

Published On 2020-07-31 03:37 GMT   |   Update On 2020-07-31 03:37 GMT
திப்பு சுல்தான் உள்பட வரலாற்றாளர்களின் பாடங்களை நீக்கும் முடிவை அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் சமூக அறிவியல் பாடத்தில் இருந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான், இயேசு கிறிஸ்து உள்ளிட்ட வரலாற்றாளர்களின் பாடங்களை நீக்க கர்நாடக அரசு முடிவு செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், “பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதனால் பள்ளி கல்வித்துறை, பாடங்களை நீக்காது என்றார். இந்த நிலையில் திப்பு சுல்தான் உள்பட வரலாற்றாளர்களின் பாடங்களை நீக்கும் முடிவை அரசு நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசின் பொது கல்வித்துறை புதிதாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் 2020-21-ம் ஆண்டு கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளி கல்வித்துறை மந்திரியின் ஆலோசனைப்படி பள்ளி பாடத்திட்டங்களில் 120 நாட்களுக்குரிய பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் பாடங்கள் குறைத்து உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் பள்ளி கல்வித்துறை மந்திரியின் ஆலோசனைப்படி, 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் பாடங்களை குறைக்க எடுக்கப்பட்ட முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் இணையதளத்தில் நீக்கப்பட்ட பாடங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு பொது கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News