செய்திகள்
யுஜிசி அலுவலகம்

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை -யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல்

Published On 2020-07-30 10:23 GMT   |   Update On 2020-07-30 10:23 GMT
கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று யுஜிசி தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். மாணவர்கள், தங்கள் மனுவில், யு.ஜி.சி வழிகாட்டுதல்களை தன்னிச்சையாக இருப்பதாகவும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் கூறி உள்ளனர்.

இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படுகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யும்படி யுஜிசிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில், யுஜிசி சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யம் திட்டம் இல்லை என்றும், அனைத்து பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 2020 இறுதிக்குள் கடைசி செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டு தேர்வை நடத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. 

இறுதியாண்டு தேர்வை  ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பரில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு வேறு ஒரு தேதியில் எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் யுஜிசி கூறி உள்ளது. 

மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில், இளங்கலை/ முதுகலை மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவது யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 
Tags:    

Similar News