செய்திகள்
காங்கிரஸ்

முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தபோது எங்களது தார்மீகம் நன்றாக இருந்ததா?: குமாரசாமிக்கு, காங்கிரஸ் கேள்வி

Published On 2020-07-30 03:28 GMT   |   Update On 2020-07-30 03:28 GMT
காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதல்-மந்திரி நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தபோது, காங்கிரசின் தார்மீகம் நன்றாக இருந்ததா? என்று குமாரசாமியை நோக்கி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு :

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பான விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களை பா.ஜனதா குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்குவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்ட முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, “குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் விலைக்கு வாங்கியது. அதனால் பா.ஜனதா நடத்தும் குதிரை பேரம் குறித்து குறை சொல்ல காங்கிரசுக்கு அருகதை இல்லை. நாட்டில் குதிரை பேரத்தை அறிமுகம் செய்து வைத்ததே காங்கிரஸ் தான்“ என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

குமாரசாமி அவர்களே, ஆளுங்கட்சியில் வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இணைவதற்கும், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்தி ஆபரேஷன் தாமரை மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியவில்லையா?. இது கூட தெரியாத அளவுக்கு நீங்கள் இருக்கிறீர்களா?.

காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதல்-மந்திரி நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தபோது, காங்கிரசின் தார்மீகம் நன்றாக இருந்ததா?. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது காங்கிரசின் தார்மீகம் குறித்த கேள்வி உங்களுக்கு வருகிறதா?. மாநிலம் நெருக்கடியில் இருக்கும்போது, மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் அமைதியாக இருக்கும் உங்களுக்கு தார்மீகம் இருக்கிறதா?.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News