செய்திகள்
சித்தராமையா

திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும்: சித்தராமையா

Published On 2020-07-30 03:02 GMT   |   Update On 2020-07-30 03:02 GMT
பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

இயேசு கிறிஸ்து, பிரவாதி பைகம்பர், திப்பு சுல்தான், சங்கொள்ளி ராயண்ணா, ராணி அப்பக்கதேவி உள்ளிட்டோர் தொடர்பான பள்ளி பாடங் களை அரசு நீக்கியுள்ளது. கர்நாடக அரசின் முடிவை கண்டிக்கிறேன். அதிகாரப்பூர்வமான ஆட்சி பலம் இழந்து வருகிறது. சட்டவிரோத சங்பரிவார் அரசு பலம் அடைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத மாநில அரசு, நிலைமையை தவறாக பயன்படுத்தி பாடத்திட்டங்களை காவிமயமாக்கி ரகசிய கொள்கையை அமல்படுத்தி வருகிறது.

அரசியல் சாசனத்தின் விருப்பங்களை வேரோடு பிடுங்கி எறியும் இந்த சதித்திட்டத்தை காங்கிரஸ் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இதை எதிர்த்து போராட்டம் நடத்துவது தவிர்க்க முடியாது. சில வரலாற்றாளர்களின் பாடங்களை நீக்கியதில் அரசின் பங்கு இல்லை என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார். கர்நாடக பாடத்திட்ட குழு அரசை விட அதிகாரம் கொண்டதா?. பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் உள்பட வரலாற்றாளர்கள் பற்றிய பாடங்களை நீக்கும் முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அரசின் பங்கை ஒப்புக்கொள்ளுங்கள்.

கொரோனா முறைகேடுகளை வெளியே கொண்டு வரும் அதிகாரிகளின் தைரியத்தை குறைக்கும் நோக்கில் செயல்படுகிறீர்கள். முதலில் ஊழல்வாதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரு மாநகராட்சி கமிஷனரை பணி இடமாற்றம் செய்தீர்கள்?. இப்போது மதவாத சிந்தனை கொண்ட வன்முறையாளர்களை பாதுகாக்க தட்சிண கன்னடா கலெக்டரை பணி இடமாற்றம் செய்துள்ளர்கள். இது தான் உங்களின் கொரோனாவுக்கு எதிரான போராட்டமா?.

ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடி வருபவர்களுக்கு வானத்தில் இருந்து பூமழை பொழிகிறீர்கள். இன்னொருபுறம் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சிந்து பி.ரூபேசுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் பணி இடமாற்றம் செய்துள்ளர்கள். இது தானா கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் கவுரவம்?.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News