செய்திகள்
கோப்பு படம்

ராஜஸ்தான் அரசியல்: ஆகஸ்ட் 14 முதல் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட்டார் கவர்னர் கல்ராஜ்

Published On 2020-07-29 17:22 GMT   |   Update On 2020-07-29 17:22 GMT
ராஜஸ்தான் சட்டப்பேரவையை ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் கூட்ட மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதுடன், சபாநாயகர் பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுக்கு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த விவகாரத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
எனினும் தற்போது தன்னிடம் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் கெலாட் இறங்கினார்.

இதற்காக மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை பல முறை சந்தித்த கெலாட் சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், முதல்மந்திரியின் கோரிக்கையை கவர்னர் தொடர்ந்து நிராகரித்து வந்தார்.

சட்டசபையை கூட்ட அனுமதிக்கவில்லை என்றால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என கேலட் எச்சரிக்கை விடுத்தார். இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையும் முற்றுகையிடப்பட்டது.

இதற்கிடையில், தனிமனித இடைவெளியை பின்பற்றி சட்டப்பேரவையை கூட்ட நேற்று முன்தினம் ஆளுநர் அனுமதி வழங்கினார். ஆனால் பேரவையை கூட்டுவதற்கு முன்பு உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை ராஜஸ்தான் சட்டப்பேரவை தலைவர் சிபி ஜோஷ் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட அனுமதிக்கவேண்டும் எனவும் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரங்களில் அதிரடி திருப்பமாக ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா வெளியிட்டுள்ள உத்தரவின் படி ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் போது கொரோனா தடுப்பு 
நடவடிக்கையாக சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து வரும் 14 ஆம் தேதி கூட்டத்தொடர் நடைபெறும் முதல் நாளிலேயே முதல்மந்திரி அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நீருபிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்கொண்டு வருகிறார். 
Tags:    

Similar News