செய்திகள்
ஏர் இந்தியா விமானம்

மாதத்தில் 6 முறை கொரோனா பரிசோதனை, 70 சதவீத சம்பள குறைப்பு... ஏர் இந்தியா பைலட்டின் மனக்குமுறல்

Published On 2020-07-28 08:42 GMT   |   Update On 2020-07-28 08:42 GMT
இன்று 2000 வந்தே பாரத் மீட்பு திட்டங்களை முடித்து, 6.7 லட்சம் இந்தியர்களை அழைத்து வந்தபோதிலும், விமான நிர்வாகம் தங்களை கைவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டிருப்பதாக ஏர் இந்தியா பைலட் ஒருவர் கூறியிருக்கிறார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஒவ்வொரு நாடும் வெளிநாடுகளில் சிக்கியிருந்த குடிமக்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வந்தது. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த இந்தியர்களை, இந்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின்கீழ், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது.

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் ஏர் இந்தியா ஊழியர்களின் பணியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயந்து பயந்து விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா பைலட்டுகளின் வலி மிகுந்த வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியாது.

மாதத்தற்கு 6 முறை கொரோனா பரிசோதனை, 70 சதவீத சம்பளக் குறைப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் மக்களின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தங்களின் நிலை முறை குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஏர் இந்தியா பைலட் ஒருவர், பேரிடர், வன்முறை உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றிய அனுபவம் மற்றும் தற்போதைய சூழ்நிலை குறித்து விவரித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் 15 ஆண்டுகளாக இந்த துறையில் பணியாற்றுகிறேன். பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா ஏளனத்திற்கு உட்பட்டிருந்தாலும் கூட, நான் எப்போதும் எனது வேலையையும் எனது அமைப்பையும் நேசிக்கிறேன்.

இன்று 2000 வந்தே பாரத் மீட்பு திட்டங்களை முடித்து, 6.7 லட்சம் இந்தியர்களை அழைத்து வந்திருக்கிறோம். ஏராளமானோரை வெளி நாடுகளுக்கு அழைத்து சென்றிருக்கிறோம். ஆனால், நான் மிகவும் கவலையில் இருக்கிறேன். எனது விமான நிறுவனமும் அதை இயக்கும் நிர்வாகமும் என்னை கைவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. எங்கள் கடமையும் சேவையும் அர்த்தமற்றதாகவே உள்ளது. எங்களுக்கு 60 முதல் 70 சதவீதம் வரை ஒருதலைப்பட்சமாகவும் சட்டவிரோதமாகவும் சம்பளக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் உலகளவில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும், நமது சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட அளவு குறைப்பது தவிர்க்க முடியாதது என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் களத்தில் இருந்து வேலை செய்பவர்களுக்கு அதிகப்படியான சம்பளக் குறைப்பும், இருந்த இடத்தைவிட்டு நகராமல் இருக்கும் அதிகாரிகளுக்கு 7 முதல் 10 சதவீதம் மட்டுமே சம்பளம் குறைப்பதும் எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

ஏர் இந்தியா பைலட்டுகளுக்கு ஒரு பயணத்திற்கு 3 முறை கொரோனா பரிசோதனை என ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட ஆறு முறை  பரிசோதனை செய்யப்படுகிறது. எங்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையிலும், எங்கள் கடமையை சரியாக செய்தோம். நிலுவைத் தொகை பிற்காலத்தில் தீர்க்கப்படலாம் என்று நாங்கள் கருதினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News