செய்திகள்
டிகே சிவக்குமார்

ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும்: டி.கே.சிவக்குமார்

Published On 2020-07-28 02:59 GMT   |   Update On 2020-07-28 02:59 GMT
மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் நடந்த ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. ஆபரேஷன் தாமரையை ஒப்புக்கொள்ளுங்கள், கொடுத்த வாக்குறுதிப்படி மந்திரி பதவியை வழங்கினோம் என்று சொல்லுங்கள். ஆனால் சாதனை செய்துள்ளோம் என்று மட்டும் சொல்லாதீர்கள். கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் இந்த முறைகேடு குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். எடியூரப்பா அரசு தின்னதை கக்க வைக்க வேண்டியது எங்கள் கடமை. உங்களின் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, பா.ஜனதாவினர் பல்வேறு விஷயங்களில் விசாரணை கேட்டு புகார் கொடுக்கவில்லையா?. நாங்கள் மந்திரியை நீக்கவில்லையா?.

பிரதமர் மோடி 21 நாட்களில் கொரோனா போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார். மக்களை கைகளை தட்டுமாறும், விளக்கு ஏற்றுமாறும் கூறினார். ஆனால் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோர் சிகிச்சை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்த கர்நாடகமும் வாழ்வா-சாவா போராட்டத்தில் சிக்கியுள்ளது. கர்நாடகம் இருளில் சிக்கி தவிக்கிறது. ஆனால் மாநில அரசு கொரோனா பிணங்களின் பெயரில் கொள்ளையடிக்கிறது.

இந்த அரசு சொன்னபடி எதையும் செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவில்லை. வெள்ளத்தால் ரூ.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.1,800 கோடி மட்டுமே வழங்கியது. கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்கியதில் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்துள்ளது. பல்வேறு தரப்பினருக்கு நிதி உதவி வழங்குவதாக எடியூரப்பா அறிவித்தார். இதுவரை எத்தனை பேருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த அரசு ஆவணங்களை வழங்கவேண்டும்.

எதிர்க்கட்சிக்கு கணக்கு விவரங்களை வழங்குவது அரசின் கடமை. ஆனால் அரசு விவரங்களை வழங்கவில்லை. முன்பு கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருந்தபோது, பிரதமர் மோடி கர்நாடகம் வந்து பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் எங்கள் அரசை 10 சதவீத கமிஷனர் அரசு என்று குற்றம்சாட்டினார். இப்போது பா.ஜனதா அரசு ரூ.2,000 கோடி ஊழல் செய்துள்ளது. இதற்கு பிரதமரின் பதில் என்ன?.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தவறு நடந்திருந்தால் அதுபற்றி விசாரணை நடத்தட்டும். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு உள்ளது. மத்திய அரசு கர்நாடகத்திற்கு எவ்வளவு நிதி உதவிகளை வழங்கியுள்ளது என்பதை கூற வேண்டும். நாங்கள் கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்கு 5 மந்திரிகள் பதிலளித்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு உதவிகளை செய்யாததால், அவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News