செய்திகள்
ரஃபேல் ஜெட் விமானம்

பிரான்சில் இருந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன

Published On 2020-07-27 09:53 GMT   |   Update On 2020-07-27 09:53 GMT
பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்சு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி, முதலாவது ரபேல் போர் விமானத்தை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்சு அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். இந்த ரபேல் போர் விமானங்களை இயக்குவது, பராமரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய விமானப்படை ஏற்கனவே தொடங்கி உள்ளது. இதற்கான தளம், பராமரிப்பு ஆகியவற்றை ஏற்பாடு செய்வது தொடர்பாக ஏற்கனவே ரூ.400 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரபேல் விமானங்கள் விற்பதற்கான ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை பிரான்சு அரசாங்கம் இதுவரை மதித்து நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புதிய ரபேல் போர் விமானம் ஒன்று இந்திய விமானப்படை வசம் பிரான்சு அரசாங்கம் ஒப்படைத்துள்ளது.  இந்திய விமானப்படையிடம் மேலும் 4 போர் விமானங்களை கூடிய விரைவில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், மே மாதம் வர விருந்த ரஃபேல் விமானங்களின் வருகை,கொரோனா ஊரடங்கால் தாமதமானது. இதனிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரஃபேல் போர் விமானங்கள், இன்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன. ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர் வரும் 29ஆம் தேதி அவை இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகிறது.

ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானிகளே இயக்கிக் கொண்டு இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News