செய்திகள்
உச்ச நீதிமன்றம்

கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்துவதை எதிர்த்து மாணவர்கள் வழக்கு- யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2020-07-27 09:14 GMT   |   Update On 2020-07-27 09:14 GMT
கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை எந்தத் தேர்வும் நடத்தப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது முந்தைய மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் இருந்தனர்.

இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் , பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். மாணவர்கள், தங்கள் மனுவில், யு.ஜி.சி வழிகாட்டுதல்கள் தன்னிச்சையாக இருப்பதாகவும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் கூறி உள்ளனர்.

இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி யுஜிசிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
Tags:    

Similar News