செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி

மழை, வெள்ளம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அசாம், பீகார், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு 9 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்

Published On 2020-07-25 08:27 GMT   |   Update On 2020-07-25 08:27 GMT
மழை, வெள்ளம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அசாம், பீகார், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு 9 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து இதனை தொடங்கிவைத்தார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனினும் மக்களின் பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே நாட்டின் வடபகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், டெல்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து நிவாரண முகாம்களை தஞ்சமடைந்து உள்ளனர்.

குறிப்பாக அசாம் மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு தொடர் கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 26 மாவட்டங்களில் 28 லட்சத்து 32,000 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் பீகார் மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 7 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் 28 ஆயிரத்து 791 பேரும் பீகாரில் 31 ஆயிரத்து 980 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 104 ஆக உள்ள நிலையில் இதுவரை 1,289 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் மழை வெள்ளம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அசாம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் 9 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டன.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து இதனைத் தொடங்கி வைத்தார்.

நிவாரணப் பொருட்களில் தார்பாய்கள், வே ட்டி சேலைகள், போர்வைகள், சமையலறை பெட்டிகள் கொசுவலைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா பாதுகாப்பு பொருட்களான கையுறைகள், முககவசங்கள் உள்ளிட்டவையும் நிவாரணப் பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News