செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

கேரள தங்கம் கடத்தல்- ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

Published On 2020-07-25 06:01 GMT   |   Update On 2020-07-25 06:01 GMT
கேரள தங்கம் கடத்தலில் கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கேரளாவுக்கு கடத்திய வழக்கில் அண்மையில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைதுசெய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோரை அடுத்த மாதம் 21-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், ஸ்வப்னா சுரேஷின் வங்கி கணக்குகளையும், லாக்கர்களையும் ஆய்வுசெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் ஸ்வப்னா சுரேஷின் தனி லாக்கரை சோதனை செய்ததில் 1 கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தியதில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா தகவல் அளித்துள்ளார். இதனால் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கும் தொடர்புடையதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
Tags:    

Similar News