செய்திகள்
ஈசுவரப்பா

காங்கிரசில் டி.கே.சிவக்குமார்- சித்தராமையா இடையே போட்டி: மந்திரி ஈசுவரப்பா

Published On 2020-07-25 02:59 GMT   |   Update On 2020-07-25 02:59 GMT
காங்கிரசில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடையே போட்டி நிலவுவதாக கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா கூறியுள்ளார்.
சித்ரதுர்கா :

கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சி ஏமாற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநில அரசு கொண்டு வந்துள்ள நில சீர்தீருத்த சட்டத்தை எதிர்த்து விவசாய சங்கத்துடன் சேர்ந்து போராடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். தனியாக போராட்டம் நடத்தும் அளவுக்கு காங்கிரசுக்கு பலம் இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது.

காங்கிரசில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடையே போட்டி நிலவுகிறது. மாநில அரசை ஏதாவது குறை கூறினால், அதன் மூலம் தலைவராகலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். சோனியா காந்தியின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக காங்கிரசார் சொல்கிறார்கள். காங்கிரசும் இன்னும் களத்தில் தான் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள அக்கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கட்சி பேதங்களை மறந்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். அரசியல் செய்வதை மறந்து எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நெருக்கடியான நேரத்திலும் அரசியல் செய்கிறார் களே என்று மக்கள் காங்கிரசை தூற்றுகிறார்கள்.

இவ்வாறு மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
Tags:    

Similar News