செய்திகள்
ஆளுநர் மாளிகை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள்

ஆளுநர் மாளிகையில் தர்ணா... அடுத்து அமைச்சரவை கூட்டம்- சூடுபிடிக்கும் ராஜஸ்தான் அரசியல் களம்

Published On 2020-07-24 15:02 GMT   |   Update On 2020-07-24 15:02 GMT
ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்படும் என ஆளுநர் உறுதி அளித்ததையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணாவை கைவிட்டு, ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறினர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதனால், அதிருப்தி அணியை உருவாக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கொறடா அளித்த புகாரின் பேரில், 19 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தனித்து செயல்பட்டு வரும் நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு அசோக் கெலாட் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநர் மாளிகை வளாகத்தில் எம்எல்ஏக்கள் அமர்ந்து நீண்ட தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபை கூட்டத்தொடரை கூட்ட ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 

அதன்பின்னர் முதல்வர் கெலாட், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபை கூட்டத்தொடரை நடத்த அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். சட்டசபையை கூட்ட அழைப்பு விடுக்கப்படும் என ஆளுநர் உறுதி அளித்ததையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணாவை கைவிட்டு, ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறினர்.

அதேசமயம், உடனடியாக அமைச்சரவை கூட்டதையும் அசோக் கெலாட் கூட்டி உள்ளார். இன்று இரவு 9.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆளுநர் அனுமதி அளித்ததும், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கெலாட் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News