செய்திகள்
ஆளுநருடன் அசோக் கெலாட் சந்திப்பு

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி- ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்தார் அசோக் கெலாட்

Published On 2020-07-24 10:08 GMT   |   Update On 2020-07-24 10:25 GMT
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இன்று தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்து சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால், அவரது துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. 

தொடர்ந்து சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கொறடா அளித்த புகாரின் பேரில், 19 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தனித்து செயல்பட்டு வரும் நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு பிறகு அசோக் கெலாட் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.  



ஆளுநர் மாளிகை வளாகத்தில் கூடிய எம்எல்ஏக்கள், சட்டசபை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபை கூட்டத்தொடரை நடத்த அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஜூலை 27 முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட விரும்புவதாக முதல்வர் அசோக் கெலாட் கூறினார். அதற்கான அனுமதி வழங்குமாறு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், ஆளுநர் தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. 

இதுபற்றி பேசிய கெலாட், மேலிட அழுத்தத்தின் கீழ் ஆளுநர் செயல்படுவதாகவும், அதனால்தான் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கான உத்தரவை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஆளுநர் அனுமதி அளித்ததும், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கெலாட் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News