செய்திகள்
அனுராக் ஸ்ரீவஸ்தவா

லடாக்கில் இருந்து சீனா முழுமையாக படைகளை விலக்கும் என்று எதிர்பார்க்கிறோம்: அனுராக் ஸ்ரீவஸ்தவா

Published On 2020-07-24 03:22 GMT   |   Update On 2020-07-24 03:22 GMT
லடாக்கில் இருந்து படைகளை முழுமையாக பின்வாங்கச் செய்வதில் சீனா உண்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
புதுடெல்லி :

லடாக்கில் சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவு மந்திரி வாங் யியும் தொலைபேசி மூலம் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, மறுநாள் 6-ந் தேதி, இரு நாட்டு படைகளும் பின்வாங்கத் தொடங்கின.

இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளாக செயல்பட்ட அவர்களது பேச்சுவார்த்தையை சுட்டிக்காட்டி, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின்போது, படைகளை முழுமையாக பின்வாங்கச் செய்வது என்றும், அமைதியை நிலைநிறுத்துவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

எல்லையில் அமைதியை கடைப்பிடிப்பதுதான், சீனாவுடனான இருதரப்பு உறவுக்கு அடிப்படை ஆகும். எனவே, லடாக்கில் இருந்து படைகளை முழுமையாக பின்வாங்கச் செய்வதில் சீனா உண்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பதற்றத்தை தணிப்பதுடன், எல்லையில் அமைதியை முழுமையாக நிலைநிறுத்தும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

எல்லைக்கோட்டை மதிக்க இந்தியா முழுமையாக உறுதி பூண்டிருப்பதாக ஏற்கனவே இந்தியா தெளிவாக தெரிவித்துள்ளது. எல்லை கோட்டில் ஏற்கனவே இருந்த நிலையை தன்னிச்சையாக மாற்றும் எந்த முயற்சியையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News