செய்திகள்
ராகுல் காந்தி

சொந்த செல்வாக்கை அதிகரிப்பதில் தான் மோடி அக்கறை காட்டுகிறார்: ராகுல் காந்தி

Published On 2020-07-24 02:59 GMT   |   Update On 2020-07-24 02:59 GMT
சீனாவுடனான எல்லை பிரச்சினையில், தனது சொந்த செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதில்தான் பிரதமர் மோடி அக்கறை காட்டுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி :

சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குறை கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே 2 வீடியோக்களை வெளியிட்டார். அதில், பிரதமர் மோடி மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பாரதீய ஜனதா தலைவர்கள் பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தி மூன்றாவதாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சீனாவுடனான எல்லை பிரச்சினையை கையாளுவதில் இந்தியாவுக்கு சர்வதேச அளவிலான தொலைநோக்கு பார்வை தேவை. ஆனால் மத்திய அரசிடம் தேசிய அளவிலான தொலைநோக்கு பார்வையோ அல்லது சர்வதேச அளவிலான தொலைநோக்கு பார்வையோ இல்லை. நம்முடைய நிலையை வலுப்படுத்துவதோடு உளவியல் ரீதியாக பிரச்சினையை கையாண்டு சீனாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும். போனால் போகிறது என்று சதாரணமாக இந்த பிரச்சினையை கையாளக்கூடாது.

எல்லை பிரச்சினையை எல்லை பிரச்சினையாகவே கருதி அதற்கு தீர்வுகாண வேண்டும். இந்த விஷயத்தில் நமது அணுகுமுறையிலும், சிந்தனையிலும் மாற்றம் தேவை. அந்த வகையில் நிறைய வாய்ப்புகளை நாம் இழந்து இருக்கிறோம். தொலைநோக்கு பார்வையிலான சிந்தனை இல்லாததால் நமக்குள்ளேயே நாம் சண்டையிட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் அரசியல் நோக்கிலேயே செயல்படுகிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

பிரதமர் மோடி தனது சொந்த செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதில்தான் நூறு சதவீதம் அக்கறை காட்டுகிறார். ஆர்வமாக இருக்கிறார். இந்த பணியை செய்த முடிப்பதில்தான் அரசின் அனைத்து அமைப்புகளும் மும்முரமாக உள்ளன. ஒரு தனி மனிதரின் செல்வாக்கு ஒரு தேசத்தின் தொலைநோக்கு பார்வைக்கு மாற்றாக அமையாது.

பிரதமருக்கு கேள்விகளை எழுப்பும் பொறுப்பு எனக்கு இருப்பதால், அதை நான் செய்கிறேன். இதன் மூலம் அவர் தனது பணியை திறம்பட செய்ய நான் அழுத்தம் கொடுக்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
Tags:    

Similar News