செய்திகள்
ராஜ்நாத் சிங்

எதிரிகளுக்கு வலுவான எச்சரிக்கை விடப்பட்டது: ராஜ்நாத் சிங்

Published On 2020-07-23 03:32 GMT   |   Update On 2020-07-23 03:32 GMT
இந்திய-சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து கிழக்கு லடாக்கை நோக்கி படைகளை வேகமாக நகர்த்தியதன் மூலம் எதிரிகளுக்கு வலுவான செய்தி அனுப்பப்பட்டதாக ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
புதுடெல்லி :

கிழக்கு லடாக்கில் கடந்த மாதம் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. எனவே எத்தகைய சவாலையும் சந்திக்கும் வகையில் இந்தியா, முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ராணுவத்துடன் இணைந்து இந்திய விமானப்படையும் கிழக்கு லடாக்கில் களத்தில் குதித்தது. எல்லையோரம் அமைந்துள்ள முன்னணி விமானப்படை தளங்களில் தாக்குதல் ரக போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் என பெரும் படையையே குவித்தது.

சீனாவின் எத்தகையை அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் குறுகிய நேரத்தில் அனைத்துவித படை பலத்துடன் விமானப்படை தயாராகியது. அத்துடன் சீனாவின் நகர்வுகளையும் கண்காணித்து வந்தது.

முன்னதாக கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து பாலாகோட்டில் அதிரடி தாக்குதலையும் இந்திய விமானப்படை வெற்றிகரமாக நடத்தியது.

இத்தகைய நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பாராட்டு தெரிவித்தார். விமானப்படை மூத்த கமாண்டர்களுக்காக டெல்லியில் நேற்று தொடங்கிய 3 நாள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போது அவர் கூறியதாவது:-

பாலாகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தொழில் ரீதியான வான்தாக்குதலும், அதைப்போல கிழக்கு லடாக்கின் முன்னணி நிலைகளில் தனது போர் தளவாடங்களை வேகமாக நகர்த்தியதும் எதிரிகளுக்கு ஒரு வலுவான செய்தியை அளித்தது. தனது இறையாண்மையை பாதுகாப்பது என்று தேசம் உறுதிபூண்டிருப்பதுடன், அதன் ஆயுதப்படைகளின் திறமை மீது மக்களும் மிகுந்த உறுதி கொண்டுள்ளனர்.

இந்திய-சீன உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பதற்ற தணிப்பு மற்றும் படை விலக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய விமானப்படை தயாராக இருக்க வேண்டும்.

மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப விமானப்படையும் தயாராக வேண்டும். குறிப்பாக நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சைபர் மற்றும் விண்வெளி போன்ற களங்களில் விமானப்படையும் இயங்க வேண்டும்.

ஆயுதப்படைகளுக்கு தேவையான நிதி வசதி உள்ளிட்ட அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். ராணுவ உற்பத்தியில் சுயசார்பை எட்டுவது மிகவும் அவசியம் ஆகும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த மாநாட்டில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மூலோபாய திட்டங்கள் குறித்து விமானப்படை கமாண்டர்கள் விவாதிக்க உள்ளனர். குறிப்பாக விமானப்படையில் ரபேல் விமானங்கள் விரைவில் இணைய உள்ளது குறித்து விரிவாக கலந்தாலோசனை நடக்கிறது.
Tags:    

Similar News