செய்திகள்
ராகுல் காந்தி

செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள சீனா ஆக்கிரமிக்கவில்லை என்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு

Published On 2020-07-21 03:17 GMT   |   Update On 2020-07-21 03:17 GMT
தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள, லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி :

லடாக் எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடியின் அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்திய நிலப்பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்து இருப்பதாகவும், ஆனால் பிரதமர் மோடி அதை ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஆட்சிக்கு வருவதற்காக தான் ஒரு சக்திவாய்ந்த தலைவர் என்ற தோற்றத்தை மோடி தனக்கு தானே உருவாக்கிக் கொண்டார். இது அவருக்கு மிகப்பெரிய பலமாகவும், சாதகமாகவும் அமைந்தது. அவர் உருவாக்கிக் கொண்ட சக்தி வாய்ந்த தலைவர் என்ற போலியான தோற்றம்தான் சீனாவுடனான எல்லை மோதல் விவகாரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.

லடாக் விவகாரத்தை சாதாரண எல்லை பிரச்சினை என்று மட்டும் எடுத்துக் கொண்டுவிட முடியாது. இந்த பிரச்சினை பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது. மோடி சக்தி வாய்ந்த தலைவர் என்ற எண்ணத்தை பாதிக்கும் வகையில் இந்த அழுத்தம் இருப்பதாக அவர்கள் (சீனா) புரிந்து கொண்டு உள்ளனர். நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் சக்திவாய்ந்த தலைவர் என்ற தோற்றத்தை உடைத்துவிடுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அதனால்தான் சீன ராணுவம் நமது நிலப்பகுதிக்குள் புகுந்து ஆக்கிரமித்துள்ள போதிலும், அவர்கள் ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள அவர் இவ்வாறு கூறுகிறார். இதுதான் எனக்கு கவலையாக உள்ளது.

பாதுகாப்பு ரீதியாக சிந்திக்காமல் சீனர்கள் எதையும் செய்யமாட்டார்கள். உலக அளவில் தங்களுக்கு சாதகமாகத்தான் எந்த பிரச்சினையையும் அணுகுகிறார்கள். கல்வான் ஆகட்டும்; டெம்சோக் ஆகட்டும் அல்லது பங்கோங்சோ ஏரி என்றாலும் அவர்களுடைய திட்டம் பெரியதாக உள்ளது. அங்கு தனது நிலைப்பாட்டை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அங்குள்ள நமது நெடுஞ்சாலையால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து காஷ்மீரில் எதையாவது செய்ய விரும்புகிறார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
Tags:    

Similar News