செய்திகள்
குமாரசாமி

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் வீடுகளில் அறிவிப்பு பேனர் வைக்க குமாரசாமி கடும் எதிர்ப்பு

Published On 2020-07-20 07:33 GMT   |   Update On 2020-07-20 07:33 GMT
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் வீடுகளில் அறிவிப்பு பேனர் வைப்பது நவீன தீண்டாமை என குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோரின் வீட்டு சுவற்றில், அரசு அறிவிப்பு பேனரை வைக்கிறது. இவ்வாறு கொரோனா பாதித்தோரின் வீட்டின் சுவற்றில் அறிவிப்பு பேனர் வைப்பது, நவீன தீண்டாமை என்று கூறி முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதித்தவர்களின் வீட்டு சுவற்றில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் அறிவிப்பு பேனர், பலகைகள் வைத்து வருகிறார்கள். இது புதிய யுகத்தின் நவீன சமூக தீண்டாமை ஆகும். மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதாக இது உள்ளது. அந்த குடும்பத்தினரை இந்த சமுதாயம், சமூக புறக்கணிப்புடன் பார்க்கிறது. 

கொரோனா பாதிக்கப்பட்ட பிறகும் அந்த குடும்பத்தினர் கவுரவமாக வாழ வேண்டும். அதனால் வீட்டு சுவற்றில் பலகைகளை வைக்கும் வழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.

வீட்டின் முன்பு பலகைகளை போட்டு தீண்டாமையை ஏற்படுத்துவதற்கு பதிலாக சுகாதாரத்துறை பணியாளர்களை கொரோனா பாதித்த வீடுகளுக்கு அனுப்பி தைரியம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறி அவர்களின் பொறுப்புணர்வு குறித்து எடுத்துக்கூற வேண்டும். அதை விடுத்து வைரஸ் பாதித்தோரை அவமானப்படுத்துவதை கைவிட முதல்-மந்திரி எடியூரப்பா நடவடிக்கை வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது தவறு. 

ஆனால் அதே காரணத்திற்காக மருத்தவ கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்வதாக எச்சரிக்கை விடுப்பதும் சரியல்ல. உரிமத்தை ரத்து செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. மேலும் மருத்துவ கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தான் இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். மருத்துவ கல்லூரி நிர்வாகத்துடன் பேசி அவர்களின் நம்பிக்கையை பெற்று படுக்கைகளை பெறுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News