செய்திகள்
வெங்கையா நாயுடு

பாராளுமன்றம் விரைவில் கூடுகிறது: வெங்கையா நாயுடு சூசக தகவல்

Published On 2020-07-20 03:23 GMT   |   Update On 2020-07-20 03:23 GMT
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளதாக வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மார்ச் 23-ந் தேதி முடித்துக் கொள்ளப்பட்டது.

அடுத்தபடியாக, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான காலம் நெருங்கி வருகிறது. தற்போதைய கொரோனா சூழ்நிலையில், கூட்டத்தொடரை நடத்துவது குறித்து பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் இரு அவைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இணையவழியில் கூட்டத்தொடரை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. வழக்கம்போல் நடத்துவதாக இருந்தால், சமூக இடைவெளியை பின்பற்றி, இருக்கைகளை எப்படி மாற்றி அமைப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

இடவசதி இல்லாவிட்டால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் எம்.பி.க்களை பங்கேற்க வைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்கும் என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு சூசகமாக கூறியுள்ளார். ‘பேஸ்புக்‘ பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் அவர் இதை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23-ந் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா சூழலில், மக்களுடன் இருப்பதற்கு எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்ததால், முன்கூட்டியே கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.

பொதுவாக, கடைசி அமர்வு முடிந்து 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடர் நடக்க வேண்டும்.

எனவே, மழைக்கால கூட்டத்தொடரையும், பாராளுமன்ற குழு கூட்டங்களையும் நடத்துவது பற்றி நானும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் பல சுற்று ஆலோசனைகள் நடத்தி உள்ளோம். சமூக இடைவெளியை பின்பற்றி கூட்டத்தொடரை நடத்துவது பற்றி விவாதித்துள்ளோம்.

இருக்கை வசதி, எம்.பி.க்கள் பங்கேற்பு குறித்து நன்கு திட்டமிட வேண்டி இருக்கிறது. அதுபற்றியும் விரிவாக விவாதித்துள்ளோம்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
Tags:    

Similar News