செய்திகள்
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆய்வு செய்த காட்சி

டெல்லி காவல்துறையினரை ‘பிளாஸ்மா வாரியர்ஸ்’ என பாராட்டிய ஹர்ஷவர்தன்

Published On 2020-07-19 17:35 GMT   |   Update On 2020-07-19 17:35 GMT
கொரோனாவிலிருந்து குணமடைந்து பிளாஸ்மா தானம் செய்து வரும் டெல்லி காவல்துறையினரை, ‘பிளாஸ்மா வாரியர்ஸ்’ என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டியுள்ளார்.
புதுடெல்லி:

உலக நாடுகளை தனது கோரப்பிடியால் நடுநடுங்க வைத்து வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வெவ்வேறு மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து, அதை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையும் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட காவல்துறையினர், மற்ற உயிர்களைக் காக்கும் வகையில் பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர்.

டெல்லியில் காவல்துறையைச் சேர்ந்த 2,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்ட காவல்துறையினர், தற்போது பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையுடன் டெல்லி காவல்துறை இணைந்து இந்த பிளாஸ்மா தான திட்டத்தை தொடங்கியுள்ளது.

இது குறித்து பேசிய டெல்லி மாநகர காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா, டெல்லி காவல்துறையில் சுமார் 84% பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக கூறினார். பிளாஸ்மா தானம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து பணியாற்றுவதாகவும், இது மற்றவர்களையும் பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிளாஸ்மா தானம் செய்யும் காவல்துறையினருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்ட காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளதாகவும், இந்த கொரோனா வாரியர்ஸுக்கு நன்றி கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தற்போது 'பிளாஸ்மா வாரியர்ஸ்' ஆகி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொற்றில் இருந்து மீண்ட ஒருவர் மாதத்திற்கு 2 முறை பிளாஸ்மா தானம் செய்யலாம் என்றும் அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News