செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

கொரோனாவின் சமூக பரவல் தொடங்கியது - பினராயி விஜயன் அறிவிப்பால் பரபரப்பு

Published On 2020-07-19 10:29 GMT   |   Update On 2020-07-19 10:29 GMT
திருவனந்தபுரத்தில் கொரோனாவின் சமூக பரவல் தொடங்கி விட்டதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

கேரளா மாநிலத்தில், நேற்று முன்தினம் புதிதாக 791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்புக்குள்ளானோரில் 6,029 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் அந்த மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:

திருவனந்தபுரத்தில் 2 கடலோர பகுதிகளில் சமூக தொற்றாக கொரோனா பரவத்தொடங்கி உள்ளது. பூந்துராவிலும், புல்லுவிலாவிலும் 150 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தலைநகரில் கடலோரப்பகுதிகளில் இதுவரை இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது. புதிய பகுதிகளுக்கு இந்த சமூக தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் சமூக தொற்றாக கொரோனா பரவத்தொடங்கி உள்ளதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமான மாநிலங்களுக்கு சமூக தொற்று பற்றிய கேள்வியை எழுப்புவதாகவும் இது அமைந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா ஏற்கனவே திட்டவட்டமாக கூறி உள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “சமூக தொற்று என்ற வார்த்தையை சுற்றி ஒரு விவாதம் எழுந்துள்ளது. ஆனால் சமூக தொற்று தொடர்பாக உலக சுகாதார நிறுவனம்கூட ஒரு இலக்கணம் வகுக்கவில்லை. சில மாவட்டங்களில் 1 சதவீதம் கூட பாதிப்பு இல்லை. நகர்ப்புறங்களில், கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் இந்தியா நிச்சமாக சமூக பரவல் நிலையில் இல்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” என கூறினார்.

ஆனால் இது தொடர்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ‘செரோ சர்வே’யை நிபுணர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் செரோ சர்வே தற்போதைய சூழ்நிலையை பிரதிபலிக்க வில்லை. மேலும், உண்மையை ஏற்றுக்கொள்வதில் அரசு பிடிவாதத்தை காட்டுகிறது” என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் நாட்டின் பல பகுதிகளிலும், சமூக பரவல் இருக்கிறது என்பதை வலியுறுத்துவதின் மூலம், அரசு இதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பரிதாபாத் போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் துறை தலைவர் டாக்டர் ரவி சேகர் ஜா இதுபற்றி கூறுகையில், “நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் சமூக தொற்றாகி உள்ளது என்பதில் சந்தேகம் வேண்டாம். தொடர்பு தடம் அறிதலை அரசு நிறுத்தி விட்டது. முன்பு அரசு தொடர்பு தடம் அறிவதில் தீவிரமாக செயல்பட்டது. ஆனால் இப்போது டெல்லியிலோ வேறு எங்குமோ அரசு தொடர்பு தடம் அறிவதில் தீவிரம் காட்டவில்லை. சமூக தொற்று இருப்பது அரசுக்கு தெரியும். ஆனால் ஏற்க மறுக்கிறார்கள்” என குறிப்பிட்டார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக சமூக மருந்து, சமூக ஆரோக்கிய மையத்தின் பேராசிரியர் டாக்டர் விகாஷ் பாஜ்பாய் கூறும்போது, “உண்மையை கண்டுகொள்ளாமல் இருப்பதும், அதில் பிடிவாதமாக இருப்பதும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அரசின் கொள்கையாக இருக்கலாம்” என தெரிவித்தார்.
Tags:    

Similar News