செய்திகள்
பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்

நாட்டின் ஒரு அங்குலம் பகுதியைக்கூட அந்நியர்கள் கைப்பற்ற விடமாட்டோம்- ராஜ்நாத் சிங்

Published On 2020-07-17 10:21 GMT   |   Update On 2020-07-17 10:21 GMT
எல்லையில் படைகள் வாபஸ் பெற்று வரும் சூழ்நிலையில், அங்குள்ள நிலைமையை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.
லே:

லடாக்கின் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இந்தியா-சீனா எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது. பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இதன் பலனாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வரும் சூழ்நிலையில், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், ‘தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மூலமாக எல்லை சம்பந்தமான சிக்கல்கள் எந்த அளவிற்கு தீர்க்கப்படும் என சொல்ல முடியாது. இருப்பினும் நமது நாட்டின் ஒரு அங்குல பகுதியை கூட அந்நியர்கள் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் என்பதை நான் உறுதியளிக்கின்றேன்’ என்றார்.

அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக ராஜ்நாத் சிங் ஸ்ரீநகர் சென்றார்.
Tags:    

Similar News