செய்திகள்
சாதனை படைத்த ரோகித் அய்யர்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் ரத்த புற்றுநோய் பாதித்த மாணவர் சாதனை

Published On 2020-07-17 03:26 GMT   |   Update On 2020-07-17 03:26 GMT
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் ரத்த புற்றுநோய் பாதித்த மாணவர் 91 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் வசித்து வருபவர் ரோகித் ஆர்.அய்யர்(வயது 16). இவர் மல்லேசுவரத்தில் உள்ள என்.பி.எஸ். பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் 10-ம் வகுப்பு படித்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரோகித்துக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரோகித்துக்கு டாக்டர்கள் சில பரிசோதனைகள் செய்தனர்.

அப்போது ரோகித்துக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ரோகித்தின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து ரோகித்துக்கு, புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி ரோகித் புற்றுநோய்க்கு சிகிச்சையும் பெற்று வந்தார்.

மேலும் புற்றுநோய்க்கு கொடுக்கப்பட்ட மாத்திரை, மருந்துகளையும் அவர் எடுத்து வந்தார். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தன. இந்த தேர்வை ரோகித்தும் எழுதி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் ரோகித் 91 சதவீதம் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளார். இதனால் ரோகித்தும், அவரது பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் கூறும்போது, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நிலையிலும், ரோகித் தேர்வுக்கு தயாராக இருந்தார். சிகிச்சை பெற்ற நிலையிலும் ஆஸ்பத்திரியில் இருந்து தேர்வு மையத்திற்கு பயணம் செய்து 3 மணி நேரம் தேர்வு எழுதினார். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்து உள்ளது என்றனர்.
Tags:    

Similar News