செய்திகள்
ராஜ்நாத் சிங்கை வரவேற்ற அதிகாரிகள்

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் லடாக் வருகை- எல்லை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்

Published On 2020-07-17 03:01 GMT   |   Update On 2020-07-17 04:04 GMT
இந்தியா-சீன எல்லையில் படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படும் நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று லடாக் எல்லையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.
லே:

லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் எல்லையில் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங்களையும் குவித்ததால், போர் பதற்றம் உருவானது. அதன்பின்னர் ஜூன் மாதம் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து எல்லையில் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்தது. 

பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று லடாக் வந்தார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானேவும் வருகை தந்துள்ளனர். லே விமான நிலையத்தில் இறங்கிய அவர்களுக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இன்று லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய உள்ளார். ராணுவ வீரர்களை சந்தித்து பேச உள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் நாளை ஆய்வு செய்கிறார்.

பிரதமர் மோடி லடாக் எல்லைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட 2 வாரங்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News