செய்திகள்
டி.கே.சிவக்குமார்

கொரோனாவை தடுப்பதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டது: டி.கே.சிவக்குமார்

Published On 2020-07-14 03:20 GMT   |   Update On 2020-07-14 03:20 GMT
கர்நாடக அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது. கொரோனாவை தடுப்பில் மாநில அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகம், மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்திவிட்டு பா.ஜனதா அரசை அமைக்க அக்கட்சியினர் திரைமறையில் சதி செய்து வருகிறார்கள். ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் பலமாக உள்ளது. அதனால் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முடியாது.

துணை முதல்-மந்திரி சச்சின் பைலட், எங்கள் கட்சியின் தீவிரமான விசுவாசமான தலைவர். அவர் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளார். அதனால் அவர் எங்கள் கட்சியை விட்டு விலக மாட்டார். மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்ப்பதை பா.ஜனதா கொள்கையாக வைத்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இதற்கு அனுமதி வழங்க மாட்டார்கள். கொரோனாவை தடுக்க பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். ஒருவேளை முதல்-மந்திரி எங்களிடம் கருத்து கேட்டால், அவரிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதை எடுத்துக் கூறுவோம்.

கர்நாடக அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது. கொரோனாவை தடுப்பில் மாநில அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. இதுபற்றி நாங்கள் அதிகம் பேச விரும்பவில்லை. தற்போது இந்த வைரசை தடுக்க வேண்டியது அவசியம். முன்வரும் நாட்களில் இதுகுறித்து நாங்கள் விரிவாக பேசுவோம்.

அதிகாரிகளை இந்த அரசு நம்பவில்லை. கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மந்திரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. கொரோனாவை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதில் அரசு தவறு செய்துவிட்டது. கொரோனா தடுப்பு பணிகளை கட்சி சார்பின்றி மேற்கொள்ள வேண்டும்.

கொரோனாவை தடுக்கும் பணியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவை தடுக்கும் பணிகளை பா.ஜனதாவினர் மட்டுமே மேற்கொள்வது போல் மந்திரிகள் செயல்படுகிறார்கள். இது சரியல்ல. இந்த நெருக்கடியான தருணத்தில் அனைத்துக்கட்சியினரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எங்கள் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் சித்தராமையா, மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் ஆகியோர் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஆவணங்களை திரட்டி வருகிறோம். வரும் நாட்களில் இந்த முறைகேடுகளுக்கு எதிராக நாங்கள் ஆலோசித்து முடிவு எடுப்போம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News