செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவீதமாக அதிகரிப்பு

Published On 2020-07-13 14:49 GMT   |   Update On 2020-07-13 14:49 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மத்திய அரசு தொடர்ந்து வேகம் காட்டுகிறது. மேலும் சிறப்பு முகாம்கள், நடமாடும் சோதனை வாகனங்கள் மூலமும் பரிசோதனைகளை நடத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் பலனாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளும் அதிகரித்து உள்ளது. அதேநேரம் நாடு முழுவதும் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதில் இருந்து இன்று 111-வது நாள் ஆகும்.   இந்தநிலையில்,  இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவீதமாக இருப்பதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 18,850 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 5,53,470 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் 19 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் கூடுதலாகவே உள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் 64.66 சதவிகிதத்துடன் 18-வது இடத்தில் உள்ளது.

தற்போதைய நிலையில் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,01,609 ஆகும். சிகிச்சையில் உள்ளவர்களைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,51,861 கூடுதலாக உள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 பேர் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,19,103 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,18,06,256 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News