செய்திகள்
பிரதமர் மோடி - சரத் பவார்

மகாராஷ்டிராவுக்கு அதிக நிதி வேண்டுமா? - பாஜக கூட்டணிக்கு வாருங்கள் - சரத் பவாருக்கு அழைப்பு விடும் மத்திய மந்திரி

Published On 2020-07-13 13:14 GMT   |   Update On 2020-07-13 13:14 GMT
மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்க வேண்டுமென்றால் சரத்பவார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 
இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநில முதல் மந்திரியாக உள்ளார்.

இந்த கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆவார். இதற்கிடையில், கூட்டணி ஆட்சிக்குள் அவ்வப்போது உரல்கள் நிலவி வருகிறது. 

குறிப்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த பிரச்சனைகளை சரத் பவார் சுமூகமாக தீர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.



இதற்கிடையில், சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சம்னாவுக்கு சரத்பவார் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி பரிசோதனை வெற்றி பெற்று உள்ளது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.

கூட்டணி கட்சிகள் இடையே வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகளை பார்த்தேன். ஆனால் உண்மையில் அதுபோல எதுவுமில்லை. வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட 3 கட்சிகளும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பின்னால் இருக்கிறது. கூட்டணியின் பாதையில் தௌிவு உள்ளது. எனினும் அவர்களுக்கு மத்தியில் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சரத்பவாரின் அரசியல் நிலைபாடு குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவரும் மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராம்தாஸ் கூறுகையில்,’சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் எடுத்த முடிவு அவர்களுக்கு எந்த நன்மையும் தராது. 

நாடு வளர்ச்சியடைய வேண்டுவும், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு மத்திய அதிக நிதி வழங்க வேண்டும் என சரத்பவார் நினைத்தால் அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News