செய்திகள்
ஸ்வப்னா சுரேஸ், சந்தீப்

தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷை 7 நாட்கள் காவலில் எடுத்தது என்.ஐ.ஏ. அமைப்பு

Published On 2020-07-13 11:14 GMT   |   Update On 2020-07-13 11:14 GMT
கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது தீவிரவாத நிதி திட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். 

வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் என்.ஐ,ஏ. அதிகாரிகள் பெங்களூரில் கைது செய்து கேரளா அழைத்து வந்தனர்.

கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்படும் முன்னர் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டடது. இதையடுத்து முடிவுகள் வரும் வரை இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து நேற்று ஸ்வப்னா மற்றும் சந்தீப் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவில் இருவருக்கும் வைரஸ் தொற்று பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்த விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அமைப்பினருக்கு அனுமதி வழங்கினர்.

இதையடுத்து, இருவரையும் 21ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன.
Tags:    

Similar News