செய்திகள்
அமித்ஷா

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் உள்ளது- அமித்ஷா

Published On 2020-07-13 01:49 GMT   |   Update On 2020-07-13 01:49 GMT
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
குர்கான்:

மத்திய ஆயுத போலீஸ் படைகள், நாடு முழுவதும் உள்ள தங்கள் அலுவலக வளாகங்களில் இம்மாத இறுதிக்குள் ஒரு கோடியே 37 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளன. இத்திட்டப்படி, அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் பயிற்சி நிலைய வளாகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மரக்கன்று நட்டு வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கொரோனா என்பது மிகப்பெரிய தொற்றுநோயாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் அதை எதிர்த்து போரிட்டு வருகின்றன. உலக அளவில் எங்காவது கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமான போர் நடக்கிறது என்றால், அது பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவில்தான்.

இந்தியாவில் கூட்டாட்சி முறை இருப்பதாலும், 130 கோடி மக்கள்தொகை இருப்பதாலும் இந்த சவாலை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், 130 கோடி மக்களும், அனைத்து மாநிலங்களும், ஒவ்வொரு தனிநபரும் ஒரே நாடாக இந்த போரில் பங்கேற்றனர்.

ஒவ்வொருவரும் போரில் கைகோர்த்தனர். அதனால், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருக்கிறது. இந்த போரை உறுதியுடனும், ஆர்வத்துடனும் தொடர்ந்து, கொரோனாவை தோற்கடிப்போம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய ஆயுத போலீஸ் படைகளின் பணி பாராட்டுக்கு உரியது. இதில், 31 வீரர்கள் பலியாகி உள்ளனர். அவர்களின் தியாகம் வீண்போகாது. பொன்னெழுத்துக்களால் எழுதப்படும்.

மத்திய ஆயுத போலீஸ் படையினர் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை பொறுப்பேற்றுக்கொண்டு, அது பெரிதாக வளரும்வரை பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க இதுவே வழி.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Tags:    

Similar News