செய்திகள்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர ஹூடா

ராஜஸ்தான் அரசியல்: ’பாஜக எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளனர்’ - காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிரடி

Published On 2020-07-12 16:57 GMT   |   Update On 2020-07-12 16:57 GMT
பாஜகவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில துணை முதல் மந்திரியும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் டெல்லி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சிக்கு வரலாம் என்ற பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில், சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 20-க்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கோலட் இன்று இரவு 10 மணியளவில் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முதல் மந்திரியின் வீட்டில் வைத்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முதல் மந்திரியுடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர ஹூடா கூறுகையில், 

'அசோக் கோலட்டிடம் பெரும்பான்மை உள்ளது. நாங்களும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பாஜகவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எங்கள் தொடர்பில் உள்ளனர். நாங்கள் இழக்கும் எம்.எல்.ஏ.க்களை விட பாஜகவில் இருந்து அதிக எம்.எல்.ஏ.க்களை எங்கள் பக்கம் கொண்டு வருவோம்’ என அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News