செய்திகள்
சச்சின் பைலட் மற்றும் அசோக் கோலட்

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: காங்கிரஸ் எம்.எல்,ஏ.க்களுடன் முதல்மந்திரி நாளை ஆலோசனை

Published On 2020-07-12 13:57 GMT   |   Update On 2020-07-12 14:22 GMT
ராஜஸ்தான் மாநில முதல்மந்திரியும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கோலட் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் நாளை காலை 10.30 மணியளவில் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கேலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 

எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது. இதனால் அசோக் கேலாட்கின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்ற நிலையே ராஜஸ்தானில் நிலவி வந்தது.

கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகிறது என்று அசோக் கேலாட் குற்றம்சாட்டினர். அவருக்கு சச்சின் பைலட் ஆதரவாக இருந்தார். அந்த நேரத்தில் குழப்பம் ஏதும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் துணை முதல்மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும், முதல் மந்திரி அசோக் கேலாட்டுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்ததாக தெரிகிறது.

ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவலை விசாரிக்க முதல் மந்திரி அசோக் கேலாட் சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தார்.

அந்த விசாரணைக்குழுவின் முன் ஆஜராக துணை முதல்மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் இன்று திடீரென டெல்லி சென்றார்.

தற்போது சச்சின் பைலட்டிடம்  19-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.-க்கள் உள்ளன என்றும் அவர் பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை இது உண்மை என்றால் மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பிரிந்து சென்று காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது போல் 
சச்சின் பைலட்டும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராஜஸ்தான் அரசியலில் புயல் அடித்துள்ளது.

தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பம் குறித்து, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே கூறுகையில்,' டெல்லிக்கு சென்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். பேச்சுவார்த்தைக்கு பின் பெரும்பாலானோர் ராஜஸ்தானுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். 

ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசை நிலைகுலையச்செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் அந்த முயற்சியில் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். அனைத்தும் சரியாக உள்ளது.

காங்கிரஸ் வலிமையாக இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி மீது முதல் மந்திரி அசோக் கோலட் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். தற்போது உள்ள நிலைமையை பாஜாக வேண்டுமேன்றே திசைதிருப்புகிறது’ என்றார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் மாநில முதல்மந்திரியும், ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கோலட்டின் வீட்டில் வைத்து நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்களும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சிலரும் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக உள்ளதாகவும், எந்த சூழ்நிலையிலும் பைலட்டுக்குதான் அவர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழலாம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

முதல் மந்திரியின் வீட்டில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கு பெறும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்தே சச்சின் பைலட்டிடம் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது தெரியவரும். 

Tags:    

Similar News