செய்திகள்
மும்பையில் தாராவி

மும்பையில் தாராவியில் புதியதாக 5 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-12 13:21 GMT   |   Update On 2020-07-12 13:21 GMT
மும்பையில் தாராவி குடிசைப்பகுதியில் புதியதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மும்பை:

மும்பையில் தாராவி தனித்தீவாய்த்தான் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்பு மும்பைக்கு உண்டென்றால், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைகளின் தொகுப்பு என்ற பெருமை தாராவிக்கு இருக்கிறது.

அதுவும் வெறும் 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்பதுவும்  தாராவியின் அதிசயம்தான். தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி மும்பை சென்ற தமிழர்களுக்கு இரண்டாவது தாய்வீடு என்றால் அது தாராவிதான்.  பத்துக்கு பத்து என்று வேடிக்கையாக சொல்கிற அளவில் 100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் சர்வ சாதாரணமாக 10 பேர் வாழ்வது இந்தியாவிலேயே தாராவியில் மட்டும்தான்.

சின்னச்சின்ன சந்துகள் ஏராளம். அவற்றில் வசித்துக்கொண்டு தனி மனித இடைவெளியை பின்பற்றுவதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

தாராவியில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது.

நேற்று வரை தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,370 ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று தாராவியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2, 375 ஆக அதிகரித்து உள்ளது.  இதில் 2 ஆயிரத்து 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 113 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்து இருப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News