செய்திகள்
ரவுடி விகாஸ் துபே

ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் விவகாரம் - விசாரணைக்குழு அமைப்பு

Published On 2020-07-11 13:31 GMT   |   Update On 2020-07-11 13:31 GMT
கான்பூர் என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபே 5 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் சிக்கினான். கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபே, விசாரணைக்கு பின்னர் உத்தர பிரதேச போலீசில் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான்.

அவனை உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு சென்றது.  காலை 7 மணியளவில் கான்பூரை அடைந்தபோது, விகாஸ் துபே இருந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய ரவுடி விகாஸ் துபே, போலீசாரின் துப்பாக்கியை பறித்து தப்ப முயன்றதாகவும், இதனால் அவரை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விகாஸ் துபே உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுவந்தனர். குறிப்பாக ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என்று உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி இருந்தார்.

‘விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற கார் கவிழவில்லை, கவிழ்க்கப்பட்டுள்ளது. ரகசியங்களால் கவிழ்க்கப்படுவதிலிருந்து உ.பி. அரசாங்கம் காப்பாற்றப்பட்டுள்ளது’ என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கான்பூர் என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழுவை அமைத்து உத்தர பிரதேச அரசு உத்திரவிட்டுள்ளது.  கைதான மறுநாள் விகாஸ் என்கவுண்டர் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விசாரணைக்குழுவை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா? அல்லது சரண் அடைந்தாரா? என்பது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News