செய்திகள்
பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை- பிரதமர் மோடி உத்தரவு

Published On 2020-07-11 09:12 GMT   |   Update On 2020-07-11 09:12 GMT
கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும் என்றும், தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர், அமைச்சரவை செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். 

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். 

பொது இடங்களில் மக்கள் சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர், அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

‘கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும். தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தலைநகர் டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியது. ஒட்டுமொத்த என்.சி.ஆர் பகுதியிலும் தொற்று நோயை கட்டுப்படுத்த மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து இதேபோன்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்’ என்றும் மோடி வலியுறுத்தினார்.
Tags:    

Similar News