செய்திகள்
அருணாசலபிரதேசத்தில் நிலச்சரிவு

அருணாசலபிரதேசத்தில் நிலச்சரிவு - 8 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பலி

Published On 2020-07-11 08:35 GMT   |   Update On 2020-07-11 08:35 GMT
அருணாசலபிரதேசத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இடாநகர்:

அருணாசலபிரதேச மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறு, குளம் உள்ளிட்ட நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழைக்கு இடையே அங்கு இருவேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் அந்த குழந்தை உள்பட 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாபூம் பரே மாவட்டத்தில் உள்ள டிக்டோ கிராமத்தில் வசித்து வந்த அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் பரிதாபமாக அவர்கள் பலியாகி உள்ளனர். 

மற்ற 4 பேர் அங்குள்ள மொடிரிஜோ பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அம்மாநில கவர்னர் பி.டி.மிஸ்ரா மற்றும் முதல்-மந்திரி பெமா காண்டு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று பெமா காண்டு அறிவித்துள்ளார். 

மேலும் சில நாட்களுக்கு அங்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News