செய்திகள்
கடத்தல் தங்கம், ஸ்வப்னா சுரேஷ்

கேரளா தங்கக்கடத்தல் விவகாரம் - ஸ்வப்னா சுரேஷ் உள்பட 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு

Published On 2020-07-10 13:47 GMT   |   Update On 2020-07-10 13:47 GMT
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

இதற்கிடையில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேஷ் தனக்கும் இந்த கடதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) மேற்கொண்டு வருவதாகவும் ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது என்.ஐ.ஏ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாகவும் அதற்கான அறிக்கையை தாக்கல்
செய்தார். 

இதனால், இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் தான் விசாரிக்க முடியும் எனவும், முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது  எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 14 ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

மேலும், தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) நகலை, குற்றவாளி ஸ்வப்னா சுரேஷின் வழக்கறிஞருக்கு வழங்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Tags:    

Similar News