செய்திகள்
பேருந்தை விரட்டிச்சென்ற பெண்

உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண் - வீடியோ

Published On 2020-07-09 12:04 GMT   |   Update On 2020-07-09 12:04 GMT
பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்காக பேருந்தை விரட்டி சென்று நிறுத்திய பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவல்லா:

உலகம் முழுவதையும் நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் மனித இனத்திற்கு பெரும் தீங்கிழைத்து வருகிறது. இந்த நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களால் அடக்கம் செய்ய முடியாது. சுகாதாரத்துறையினரே விஞ்ஞான ரீதியில் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்து வருகிறார்கள்.

தங்களையும் கொரோனா பாதித்துவிடுமோ என்ற அச்சத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் கூட சில பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திய சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதுபோல் தற்போது வேறு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களையும் அடக்கம் செய்ய உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் செல்லாத நிலையை கொரோனா உருவாக்கிவிட்டது.

இத்தகைய சூழ்நிலையில் மனித நேயம் இன்னும் மரித்துப்போகவில்லை என்பதை காட்டும் நிகழ்வுகள் அவ்வப்போது ஆங்காங்கே நமக்கு உணர்த்திக்கொண்டுதான் உள்ளன.

அப்படி ஒரு சம்பவம் கேரளா மாநிலம், திருவல்லா பகுதியில் நடந்துள்ளது.   திருவல்லா பகுதியை சேர்ந்தவர் சுப்ரியா என்ற பெண். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியே அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில் ஒரு பார்வையற்ற முதியவர் அந்த பெண்ணிடம் எதார்த்தமாக இந்த பேருந்து திருவனந்தபுரம் செல்லுமா என கேட்டிருக்கிறார்.  இந்நிலையில்  அந்த பேருந்து அவ்விடத்தை விட்டு புறப்பட்டு சென்றது. 

இதை அறிந்த அந்த பெண் தன் மூச்சு வாங்கும் அளவுக்கு வேகமாக ஓடி அந்த பேரூந்தை நிறுத்தினார்.  பேருந்து நடத்துனரும் அந்த பெண் பேருந்தில் ஏறுவதற்காகத் தான் இவ்வளவு வேகமாக வருவதாக நினைத்து வண்டியை நிறுத்தினார்.  அந்த பெண் பேருந்து நடத்துனரிடம் சம்பவத்தை கூறிய நிலையில் ஓடிச் சென்று அந்த முதியவரை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டு சென்றார்.  இச்சம்பவம் அங்கு கூடியிருந்தோர் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று தந்தது.



பேருந்தை பிடிக்க அவர் ஓடி வந்ததும், பின்பு அதே வேகத்தில் சென்று அந்த பார்வையற்ற முதியவரை பேருந்தில் அவர் ஏற்றிவிடுவதும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.  இதை அங்குள்ள ஒருவர் செல்போனில் பதிவேற்றம் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.   சில வினாடிகளே இருக்கும் இந்த வீடியோவை ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக கே.ஜி.எப் படத்தில் தாய்ப்பாசத்திற்கு போடப்பட்ட பின்னணி இசை சேர்க்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News